சில மணித்துளிகள் தானே என்று, மணித்துளிகள் அல்லது விநாடிகள் (நிமிடங்கள்) வீணாவதைக் கவனமின்றி விட்டு விடக்கூடாது. மணித்துளிகளை வீணாக்குவது என்பது சிறிது சிறிதாக நமக்கான நேரத்தை வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள்...
மணித்துளிகள் தாம் யுகங்களாக மாறுகின்றன. ஒவ்வொரு விநாடியும் வாழ்நாளில் விலைமதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். அந்த மணித்துளிகளை பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் (Every minute counts). அவசரமாக அல்ல, விரைவாகச் செயல்பட வேண்டும்.
சிலர் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசும் போதும், சூழ்நிலை அறியாமல் மிகவும் மெத்தனமாகப் பேசும் போதும் கேட்பவர்கள் எரிச்சல் அடைவார்கள்.
சில நேரங்களில் "பொறுமை இழந்து நீங்கள் சொல்ல வந்தது என்ன...? அதை மட்டும் சொல்லுங்கள்" என்று நேரடியாகக் கேட்பார்கள். தேவையை ஒரு வரியிலோ சொல்லிலோ சொல்லத் தெரியாதவர் என்ன சாதிக்கப் போகிறார்? அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் நேரமும் வீணாகின்றது.
நேரம் வீணாகின்றதே என்ற உணர்வால் உந்தப்படுகிறார்கள். இவரோடு வீணாக்கிய நேரத்தைச் சரிக்கட்ட பணிகளை விரைவுபடுத்தி உழைக்க வேண்டியுள்ளது.
தெளிவான எண்ணமுடைய மனிதன் காலத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறான். தெளிவில்லாதவன் வாழ்வில் திசை தெரியாமல் அல்லல்படுகிறான்.
நேரத்தின் பெறுமதியை பின்வரும் வாய்ப்புகளைச் சந்தித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்:
- தேர்வில் தோற்ற மாணவருக்கு ஒரு ஆண்டின் பெறுமதி புரியும்!
- குறைப்பிரசவம் செய்த தாய்க்கு ஒரு மாதத்தின் பெறுமதி புரியும்!
- வாராந்திர நாளிதழ் ஆசிரியருக்கு ஒரு வாரத்தின் பெறுமதி புரியும்!
- காத்திருந்த காதலருக்கு ஒரு மணித்தியாலத்தின் பெறுமதி புரியும்!
- தொடருந்தைத் தவற விட்ட பயணிக்கு ஒரு விநாடியின் பெறுமதி புரியும்!
- விபத்திலிருந்து தப்பியவருக்கு ஒரு வினாடியின் பெறுமதி புரியும்!
- ஓட்டப் பந்தயத்தில் தோல்வியடைந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்!
குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய பணியை நீட்டித்து செய்யும் நபர்கள் முன்னேற முடியாதவர்கள். அத்துடன் அவர்கள் வாழ்க்கை பின்னே சென்று அழிந்து விடும்.
மறதி, சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் – இவை மூன்றும் சேர்ந்தால், அந்த மனிதன் மீளவே முடியாது.
வளர்ந்த சமுதாயத்தின் அடையாளம் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்தான்.
இன்று உங்கள் கையில் ஒரு நாளைய 24 மணிகள் – 1440 நிமிடங்கள் – 86,400 வினாடிகள் உள்ளன. இவற்றை வீணாக்காமல் பயனுள்ள வழியில் செலவிடுவோம்!
ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். நேரத்தை மதிப்போம். வாழ்க்கையை உயர்த்துவோம்!