சொந்தமாக சிந்திக்காமலும், மற்றவர்களின் அறிவுரையைக் கேட்காமலும் செயல்படும் போது சில வேளையில் சிலர் சிக்கலில் மாட்டிக் கொள்வதை காண்கிறோம்.
அதற்குத் தான் நம் முன்னோர்கள் சொந்த புத்தி வேண்டும். இல்லையென்றால் சொல் புத்தியாவது கொஞ்சம் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்..
ஒரு ஊர்ல ஒரு ஜென் துறவி இருந்தார். அவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று மக்களுக்கு நீதிக் கதைகள், போதனைகள் சொல்லி வந்தார்.
அவர் ஒரு நாள் ஒரு ஊருக்கு வந்தார். அங்கு சுமார் ஒரு மாதம் வரை தங்கி விட்டு வேறு ஊருக்குச் செல்ல தனது மாட்டு வண்டியைத் தயார் செஞ்சுட்டு இருந்தார்.
அப்போது அந்த ஊரில் இருந்த ஒருவன் அவரிடம் வந்து, ஊர் ஊராகத் தானும் உங்களுடன் வந்து விடுவதாக சொன்னான்.
இதைக் கேட்டதும் அவனைப் பற்றி அக்கம்பக்கம் விசாரித்த துறவி, அவன் ஒரு அனாதை என அறிந்து அவன் மேல் அனுதாபப்பட்டு அவனையும் சேர்த்துக் கொண்டு பொருட்களைக் கட்டிக் கொண்டு அடுத்த ஊருக்கு அவர்கள் பயணமானார்கள்.
துறவி வண்டியில் முன்னால் அமர்ந்து இருந்தார்.அவன் வண்டிக்குப் பின்னால் அவன் அமர்ந்திருந்தான். துறவி அவனிடம்,தம்பி பின்னால் உள்ள பொருட்கள் ஏதாவது கீழ விழுகுதான்னு பார்த்துட்டே வா'ன்னு சொன்னார்.
கொஞ்ச தூரம் பயணம் செய்த பின் ஓரிடத்தில இளைப்பாற நிறுத்தினார்கள். அப்போது வண்டியின் பின் பக்கம் வந்த துறவி சில பொருட்களைக் காணாது விக்கித்து நின்றார்.
அவனிடம் பொருட்கள் எங்கே என கேட்க, அவன் சில பொருட்கள் கீழ விழுந்திருச்சு எனச் சொன்னான்.
இவர், கீழ விழுந்தா? எடுத்து வைத்திருக்க வேண்டியது தானே எனத் துறவி கேட்க, அதற்கு அவன் நீங்க பொருட்கள் விழுகுதான்னு பாக்கத் தானே சொன்னீங்க என சொன்னான்..
அவன் அவர் சொன்னதை அப்படியே செய்ததாகச் சொன்னான். துறவி கீழே விழுந்ததை பத்திரமாக எடுத்துட்டு வா என்பதை அவன் அப்படி குறுகிய மனப்பான்மையில் எடுத்துக் கொண்டான்..
என்ன பையன் இப்படி இருக்கிறானே என்று துறவி சலித்துக் கொண்டார்.
அடுத்து அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். இந்தத் தடவை துறவி அவனிடம் கீழ எது விழுந்தாலும் பிடிச்சு எடுத்து வை என்றார்.
சிறிது தூரம் சென்ற பின் ஒரு இடத்தில் இளைப்பாற மறுபடியும் வண்டி நின்றது.துறவி வண்டியை விட்டு இறங்கி வண்டிக்கு பின்னால் வந்து பார்த்தால் வண்டி பின்பக்கம் முழுவதும் மாட்டுச் சாணமாக இருந்தது. அவன் கையிலும் சாணம் இருந்தது.
துறவி, என்ன தம்பி வண்டியில இவ்வளவு சாணி இருக்கு, என்ன விஷயம் எனக் கேட்க,
அதற்கு அவன், நீங்க தானே ஐயா எது கீழ விழுந்தாலும் எடுத்து வைன்னு சொன்னீங்க அதான் எடுத்து வைத்துக் கொண்டே வந்தேன் என பதில் சொன்னான்.
அவன் பதில் கேட்டு துறவி அவன் அறியாமையை நினைத்துக் கவலைப்பட்டார்.
சொல்வதை அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்கிறானே,, கொஞ்சம் கூட பகுத்து ஆய்ந்து பொருள் விளங்கி சமயோசிதமாக செயல்பட மாட்டேங்கறானே என மிகவும் வருத்தமுற்றார்.
அவன் சிறுபிள்ளைத்தனமான புத்தியை மாற்றி அவனை நல்ல அறிவாளியாக மாற்ற வேண்டும் என அவர் தனக்குள் நினைத்துக் கொண்டு அருகிலிருக்கும் ஊரை நோக்கிப் பயணமானார் அவனையும் கூட்டிக் கொண்டு....
ஆம்,தோழர்களே.,
இந்தக் கதையில் வரும் மனிதர்களைப் போலத் தான் நம்மில் பெரும்பான்மையோர் உள்ளனர்.
சொல்கிற சொல்லை அப்படியே அர்த்தம் கொள்ளாமல், அதனை பகுத்து உள் அர்த்தத்தை அறிந்து அதற்கேற்ப சமயோசிதமாக செயல்பட வேண்டும்.
சொன்னதைத் தான் செய்தேன் என்கிற மனப்போக்கைத் தவிர்த்து, கொஞ்சம் நம்ம புத்தியையும் பயன்படுத்தினால் நாம் நிறைய செயல்களை சாதிக்கலாம்...